ஒப்படைக்கப்பட்ட 4 உடல்கள்.. 2 குழந்தைகளை கொன்றது ஹமாஸ்தான் - இஸ்ரேல் குற்றச்சாட்டு
- சண்டை 6 வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
- இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் அவர்கள் 4 பேரும் பலியானதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக நடந்து வந்த சண்டை 6 வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.
நேற்று ஷிரி பிபஸ் என்ற பெண் , அவரது 2 குழந்தை களான ஏரியல், கிபிர் மற்றும் ஓய்வு பெற்ற பத்திரிகையாளரான ஓடட் லிப்ஷிட்ஸ் ஆகிய 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் அவர்கள் 4 பேரும் பலியானதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. 2 குழந்தைகளும் காசாவில் பாலஸ்தீன பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே தெரிவித்து உள்ளார். மேலும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்த ஷிரி பிபஸ் உடல் அவருடையது இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
மேலும் அவர் ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற அனைத்து பிணைக்கைதிகளுடன் சேர்த்து ஷிரிபிசையும் திருப்பி அனுப்ப வேண்டும் என நாங்கள் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.