உலகம்

இந்திய தேர்தலுக்கு ரூ.182 கோடி நிதி.. 'யாரையோ' வெற்றி பெற வைக்க முயற்சித்த பைடன் அரசு - டிரம்ப்

Published On 2025-02-21 07:14 IST   |   Update On 2025-02-21 07:14:00 IST
  • 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும்  21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை DODGE அறிவித்தது.

இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு வழங்கி வந்த இந்த நிதி குறித்து முந்தைய ஜோ பைடன் அரசை டிரம்ப் சாடியுள்ளார்.

மியாமி நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், " இந்திய தேர்தல்களுக்காகவும், வங்கதேசத்தில் அரசியல் சூழலை சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஆசியா ஏற்கனவே நன்றாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும். அங்கு வேறு யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச வேண்டும்" என்று சந்தேகம் கிளப்பியுள்ளார். 

Tags:    

Similar News