செய்திகள்

அமெரிக்காவின் அதிபரானால் குற்றவழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்களை விரட்டியடிப்பேன்: டொனால்ட் டிரம்ப்

Published On 2016-08-28 16:05 IST   |   Update On 2016-08-28 16:05:00 IST
அமெரிக்காவின் அதிபரானால் குற்றவழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்களை விரட்டியடிப்பேன் என அதிபர் பதவிக்கு போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் லோவா பகுதி அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவுக்குள் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை கண்காணிக்க புதிய முறைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

விசா காலம் முடிந்து நாட்டில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இதைப்போன்ற ஒரு கட்டுப்பாட்டை நாம் கடைபிடிக்கா விட்டால், எல்லைகள் இல்லாத ஒரு திறந்த நாடுபோல அமெரிக்கா மாறிவிடும்.

எனவே, நாட்டின் எல்லைகளில் மிக நீளமான எல்லைச் சுவர் கட்டப்படும். அமெரிக்காவுக்குள் வருபவர்கள், அமெரிக்காவில் இருந்து வெளியே போகிறவர்களை தடுத்து நிறுத்தி, விசாக்களை பரிசோதிக்க அங்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதன்மூலம் சட்டவிரோதமாக இங்கு குடியேறியுள்ளவர்கள் அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெற்று பலனடைந்துவரும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.

இதேபோல், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பவரகளையும், குற்றவழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்களும் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Similar News