செய்திகள்
சிரியாவில் கொடூரமான விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
பெய்ரூட்:
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் 18 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக மனித உரிமை கண்காணிப்பகம் முதலில் தெரிவித்து இருந்தது. ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், விஷவாயு வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் 11 குழந்தைகளும் அடங்குவர்.
விஷவாயு பரவியதால் பலரும் பாதிப்படைந்தனர். மயக்கம், வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ளனர்.
கடந்த 6 வருடங்களில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான விஷவாயு தாக்குதல் இது என்று சிரிய எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அரசு தரப்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக ஐ.நா. சபை அமைப்பு தனது விசாரணையில் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.