செய்திகள்
பாலம்

ஜப்பானில் அமைந்துள்ள இந்த பாலம் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதா?

Published On 2019-10-23 11:14 IST   |   Update On 2019-10-23 11:14:00 IST
ஜப்பானில் பாலம் ஒன்று 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக பரவும் வைரல் பதிவின் உண்மை பின்னணி குறித்து பார்ப்போம்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஃபுகு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை, கடந்தாண்டு நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் போர்கால அடிப்படையில், அருகில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மீம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

அந்த பதிவில் ஜப்பானில் இயற்கை பேரிடரால் சேதமடைந்த சாலைக்கு அருகில் பாலம் ஒன்று 24 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதுபோன்று நிகழ்ந்தால், அந்த பாலத்தை கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகும் என பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் வைரலான இந்தப் பதிவை சுமார் 25 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்திருந்தனர்.



இந்த வைரல் பதிவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், அந்த சாலை கடந்தாண்டு ஜூலை 7ந் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்துள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக அருகில் U வடிவில் பாலம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் ஆகஸ்ட் 27-ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது. 

2 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு அக்டோபர் 31-ந் தேதி பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த பாலம் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதுபோன்று வைரலாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.

Similar News