செய்திகள்
இந்தியாவில் வெள்ளத்தால் பலியானோருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல்
வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து டெல்லி, அசாம், பீகார், உத்ரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 75 சதவீத மாவட்டங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரிலும் வெள்ளச் சேதம் அதிகமாக உள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ‘‘ரஷிய அதிபர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரிடம் கனமழையால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு தனது கவலையை தெரிவித்துள்ளார்’’ என்று ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் ‘‘தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வருத்தத்தை ரஷ்யா பகிர்ந்து கொள்கிறது, மேலும் காயமடைந்த அனைவரையும் விரைவாக குணமடைவார்கள் என்று நம்புகிறது’’ என்று புதின் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.