உலகம்
சீனா, பாகிஸ்தானில் இருக்கும் ஜம்மு காஷ்மீர்- உலக சுகாதார மையத்தின் வரைபடத்தால் பரபரப்பு
பிற நாட்டு பிரச்சனைகளில் ஆர்வம் காட்டு அரசு, நமது தேசத்து பிரச்சனை ஒன்றை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கூறினார்.
புது டெல்லி:
கொரோனா வைரஸ் பரவல் குறித்த சர்வதேச வரைபடத்தை உலக சுகாதார மையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் சீனா மற்றும் பாகிஸ்தானில் அமைந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதை குறிக்கும் வகையில் சர்வதேச வரைபடத்தை உலக சுகாதார மையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆராயும்போது, அதன் ஒரு பகுதி பாகிஸ்தானில் இருப்பது போன்றும், மற்றொரு பகுதி சீனாவில் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளும் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் போன்ற ஒரு சர்வதேச அமைப்பின் வரைபடத்தில் இந்திய பகுதிகள் பிற நாடுகளில் இருப்பது போன்று காட்டப்பட்டிருப்பது சாதாரண விஷயம் கிடையாது.
இது தீவிரமாக அணுக வேண்டிய ஒரு சர்வதேச பிரச்சனை. இதுகுறித்து நமது அரசு விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்ற ஒரு தவறு இத்தனை நாட்கள் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது எப்படி என்று தெரியவில்லை. பிற நாட்டு பிரச்சனைகளில் ஆர்வம் காட்டு அரசு, நமது தேசத்து பிரச்சனை ஒன்றை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது போன்று தோன்றுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு சாந்தனு சென் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.