ஜெர்மனி கிறிஸ்துமஸ் மார்க்கெட் கூட்டத்தில் திடீரென புகுந்த கார்: 2 பேர் பலி
- கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- வேகமாக காரை ஓட்டி வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.
பெர்லின்:
ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்தார். அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.
இதில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என முதல் கட்ட தகவல் வெளியானது.
கார் தாக்குதலை அடுத்து மார்க்கெட் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் கூட்டத்துக்குள் கார் புகுந்து தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.