பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த வங்கதேச இடைக்கால அரசு தலைவர்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புதல்
- 1971-ம் ஆண்டின் மீதமுள்ள பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன.
- நாம் முன்னேறிச் செல்ல அந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம்.
பாகிஸ்தானும், வங்கதேசமும் ஒரே நாடுகளாக இருந்தன. 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. வங்கதேசம் தனி நாடாக பிரிவதற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி முக்கிய காரணியாக இருந்தார். அதில் இருந்து இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவு சுமூகமாக இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன்பின் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் இருந்து இந்தியா- வங்கதேச இடையிலான உறவில் சற்று விரிசல் விழுந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸின் சில முடிவுகள் இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் சந்தித்து பேசியுள்ளார். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் பொருளாதார ஒத்துழைபுக்காக முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ள 8 நாடுகள் கலந்த கொணட மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின்போது இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் பாகிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, மீதமுள்ள பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள விரும்பவதாகவும் ஷெரிப்பிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன. நாம் முன்னேறிச் செல்ல அந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் என முகமது யூனுஸ் தெரிவித்ததாக, அவரது அலுவலகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
முகமது யூனுஸ் உடன் அன்பான பரிமாற்றம் இருந்ததாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஒன்றாக, இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம் என ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவு ஏற்கனவே உறைபனியாக உறைந்துள்ள நிலையில் இருவருடைய இந்தியா- வங்கதேச உறவை மேலும் சோதனைக்குள்ளாக்கியுள்ளது.