உலகம்
சுமியில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்

உக்ரைன் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் - பேருந்துகள் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

Published On 2022-03-08 17:54 IST   |   Update On 2022-03-08 17:54:00 IST
இந்தியத் தூதரகம் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மாணவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
சுமி:

ரஷிய தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  உக்ரைனில் இருந்து  17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்த அந்த மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் பேசியிருந்தார். 

இதையடுத்து சுமியில் உள்ள இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பாதுகாப்பான பாதையை உருவாக்கினர். 
இன்று காலை 12 பேருந்துகள் மூலம் சுமி நகரில் இருந்து இந்திய மாணவ மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியத் தூதரகம் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அந்த மாணவர்களை அழைத்துச் சென்றனர்.

முன்னதாக சுமியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் குறித்த செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, 694 இந்திய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பேருந்துகளில் பொல்டாவாவுக்கு புறப்பட்டதாக தெரிவித்தார்.

நாங்கள் பொல்டாவாவுக்குச் செல்வோம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பாதுகாப்பான மண்டலத்தை அடைய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன், இந்த துயரம் நீங்கியது என பேருந்தில் செல்லும் முன்பு மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Similar News