உலகம்

அமெரிக்காவுக்கு திறமையானவர்கள் தேவை: எச்.1 பி விசாவை நிறுத்த விரும்பவில்லை- டிரம்ப்

Published On 2025-01-22 10:28 IST   |   Update On 2025-01-22 10:28:00 IST
  • 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
  • அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகல், பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது மன்னிப்பு, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

மேலும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.


இந்தநிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, எச்-1பி விசா தொடர்பாக நடக்கும் விவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:-

எச்-1பி விசா தொடர்பான விவாதத்தின் இரு பக்கங்களையும் நான் விரும்புகிறேன். ஆனால் நம் நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களையும் நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை. நான் என்ஜினீயர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து மட்டங்களில் உள்ளவர்களைப் பற்றியும் பேசுகிறேன்.

திறமையான மக்கள் நம் நாட்டிற்குள் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் எச்-1பி திட்டத்தை நான் நன்கு அறிவேன். நான் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவேன் என்றார்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும். கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி பிப்ரவரி 1-ந்தேதி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News