அத்தியாவசிய பொருட்களுடன் காசாவிற்குள் நுழைந்த 900 லாரிகள் - ஐ.நா. தகவல்
- பொருட்கள் காசாவுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
- ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காசாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் காசாவுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் லாரிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவிலும், கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்தத்தின் மூன்றாம் நாளில் கிட்டத்தட்ட 900 லாரிகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 600 லாரிகளை விட கணிசமாக அதிகம் ஆகும்.
மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான துணை ஐ.நா. ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் முஹன்னத் ஹாடி நேற்று (செவ்வாய் கிழமை) காசாவில் இருந்து ஜெருசலேமுக்கு திரும்பினார். அப்போது ஐ.நா. செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி, "பாலஸ்தீனியர்கள் தெருக்களில் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவது, சிலர் வீடு திரும்புவது, சிலர் சாலைகளை சுத்தம் செய்ய தொடங்குவதை பார்க்கும் போது கடந்த 35 ஆண்டுகால வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று," என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐ.நா. உலக உணவுத் திட்டத்தால் நடத்தப்படும் பொது சமையலறை, பிற இடங்களில் குடும்பங்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர்கள் அனைவரும் மனிதாபிமான உதவி தேவை என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் வீட்டிற்குச் செல்லவும், வேலை செய்யவும், பணம் சம்பாதிக்கவும் அவர்கள் விரும்புவதாக கூறினார்.
"மனிதாபிமான உதவியைச் சார்ந்து இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பாலஸ்தீனியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை மீண்டும் தொடங்குவது குறித்தும், ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும் பெண்களுக்கு தங்குமிடம், போர்வைகள் மற்றும் புதிய ஆடைகள் தேவைப்படுவது குறித்தும் பேசினர். வரும் நாட்களில் கூடாரங்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.