உலகம்

லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.. எலான் மஸ்க் அறிவிப்புக்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு

Published On 2025-02-08 08:08 IST   |   Update On 2025-02-08 08:08:00 IST
  • அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டது.
  • சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் அறிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.

இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய பில் கேட்ஸ், "அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 1% க்கும் குறைவாகவே வெளிநாட்டு உதவிக்காக செலவிடுகிறது என்றாலும், இந்த நிதி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. ஆகவே சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும்" என்று தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை பல நாடுகளுக்கு சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது. USAID நிறுவனத்துடன் இணைந்து பில் கேட்சின் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News