டிரம்பின் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்த நீதிமன்றம் - இந்தியர்கள் கொண்டாடுவது ஏன்?
- ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் 22 மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
- விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நிம்மதியளிக்கும்.
டிரம்ப் உத்தரவு:
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு தடாலடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
பிப்ரவரி 19 முதல் இந்த தடை நடைமுறைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதைத்தொடர்ந்து டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் சியாட்டில் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, அரசியலமைப்புடன் டிரம்ப் "கொள்கை விளையாட்டுகளை" விளையாடுகிறார். தனிப்பட்ட நலனுக்காக சட்டத்தின் ஆட்சியைத் அவர் மதிப்பிழக்க செய்ய முயல்கிறார் என்று கண்டித்தார். டிரம்பின் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டார். முன்னதாக மேரிலாந்து நீதிமன்றமும் இதே தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு அமெரிக்காவில் விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
குடியுரிமை பிறப்புரிமை:
1868-ல் இயற்றப்பட்ட சட்டவிதியின்படி பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் அமரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அமெரிக்காவில் பிறந்த குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று டிரம்பின் உத்தரவு குறிப்பிடுகிறது.
அமெரிக்க வாழ் இந்தியர்கள்:
டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்தால் அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிக அளவில் பாதிக்கும். அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கர்கள் வாழ்கின்றனர்.
அதில் கணிசமானோர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். எனவே டிரம்பின் உத்தரவு அமலுக்கு, தற்காலிக வேலை விசாவில் இருக்கும் (எச்-1பி விசா உள்ளிட்டவை) அல்லது கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியாத நிலையை உருவாக்கும் அபாயம் நிலவியது. ஆனால் தற்போது டிரம்பின் உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடையால் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.