உலகம்

அமெரிக்காவில் சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் பலி: 2 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

Published On 2025-03-16 09:12 IST   |   Update On 2025-03-16 09:12:00 IST
  • நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
  • கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மிசவுரி உள்ளது. சூறாவளி பாதிப்புக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதில், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளும் இடிந்து விழுந்தன. சுவர்கள் மீது மக்கள் நடந்து செல்லும் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது.

அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் பலியானார்கள். 8 கவுன்டி பகுதிகளை சேர்ந்த 29 பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் அமரில்லோ பகுதியில் புழுதி புயலின்போது, கார் விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருவதுடன், கடுமையான புழுதி புயலும் வீசி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன. வானிலை பாதிப்புகளால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குளிரான பகுதிகளில் குளிர் காற்றும், வெப்ப பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் ஆபத்தும் காணப்படுகின்றன. மின்னசோட்டா மற்றும் தெற்கு டகோடா பகுதிகளில் அதிக குளிருடன் கூடிய பனி சூறாவளி பாதிப்புக்கான எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. ஓரடி வரையிலான பனிப்படலம் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுத்தீயால் 689 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான நிலம் எரிந்து போயுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ், மிசவுரி மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்கள் அதிக பாதிப்படைந்து உள்ளன. இதேபோன்று, கிழக்கு லூசியானா, மிஸ்ஸிஸ்ஸிப்பி, அலபாமா, மேற்கு ஜார்ஜியா மற்றும் புளோரிடா பான்ஹேண்டில் உள்ளிட்ட பகுதிகள், சூறாவளி மற்றும் புயல் பாதிப்புக்கு இலக்காகும் பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன. டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

Tags:    

Similar News