தாய்லாந்தில் தற்காலிக அடைக்கலமானார் கோத்தபய ராஜபக்சே
- இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்தார்.
- அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாங்காங்:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் கோத்தபய தங்கி இருப்பதற்கான சமூக வருகை அனுமதி காலம் முடிவடைந்தது.
இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நேற்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அனுமதியளித்துள்ள அந்நாட்டு அரசு, அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம், அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.