போஸ்னியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி
- படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- நிலச்சரிவில் மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது.
ஜப்லானிகா:
போஸ்னியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜப்லானிகா, கொன்ஜிக் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
அப்போது அங்குள்ள ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே அந்த கிராமங்களில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஜப்லானிகா நகரில் உள்ள ஒரு கல்குவாரியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அங்கிருந்த பல வீடுகள் மண்ணில் புதையுண்டன.
அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் இந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து பேரிடர் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் துரிதமாக இறங்கினர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலச்சரிவில் மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.