உலகம்

வேலைக்கான ஆட்கள் தேர்வில் இனி செயற்கை நுண்ணறிவு: 40% நிறுவனங்கள் முடிவு

Published On 2023-06-28 16:54 IST   |   Update On 2023-06-28 16:54:00 IST
  • பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்று 65% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர்.

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவைபயன்படுத்தி, பல துறைகளில் பல வேலைகளை துரிதமாகவும், திறம்படவும் செய்வது வழக்கமாகி வருவதுடன், செயற்கை நுண்ணறிவு வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.

கட்டுரைகளை எழுதுதல், மோசடியைக் கண்டறிதல், கற்பித்தல் மற்றும் மாசுபாட்டைக் கண்காணித்தல் ஆகியவை இதன் ஏராளமான பயன்பாடுகளில் அடங்கும்.

இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, வேலைக்கான நேர்காணல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

வேலை தேடுபவர்களுக்கான பிரபல இணைய தளமான, "ரெஸ்யூம் பில்டர்" நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 43% நிறுவனங்கள், 2024ம் ஆண்டிற்குள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

கணக்கெடுப்பின் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களிலும், 15% நிறுவனங்கள் தங்களின் அனைத்து பணியமர்த்தல் முடிவுகளுக்கும் "தொடக்கத்தில் இருந்து இறுதி வரை" (start-to-finish) இனி செயற்கை நுண்ணறிவின் பயன்படுத்தலை நாடப்போவதாக கூறியுள்ளன. 32% நிறுவனங்கள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு மூலமாக செய்யப்படும் நேர்காணல்களின் செயல்திறனை மதிப்பிடுமாறு கேட்டபோது, 65% பேர் பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்றும், 14% பேர் பணியமர்த்தல் திறனைக் குறைக்கும் என்றும், மற்றும் 21% பேர் இது செயல்பாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் நம்புகின்றனர்.

ரெஸ்யூம் பில்டர் நடத்திய ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர். வேலைக்கு ஆட்களை நியமிக்கும் மேலாளர்கள் அல்லது ஆட்களை தேர்வு செய்யும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

வேலை தேடுபவர்களில் 46% பேர் இப்போது தங்கள் பயோடேட்டா மற்றும் முகப்பு கடிதங்களை (covering letter) எழுதுவதற்கு தற்போது மிகவும் பிரபலமாகவுள்ள சாட்ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும், மிக அதிக சதவீதமாக (அதாவது 78% பேர்) வேலைக்கான விண்ணப்பங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உடனே பதிலை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News