உலகம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை

Published On 2024-07-31 04:42 GMT   |   Update On 2024-07-31 05:44 GMT
  • ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்
  • இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் சார்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்தார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்தது. ஆனால் இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டு உள்ளார். ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்றும் அவருடன் பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது படுகொலையை ஈரான் மற்றும் ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக ஹமாஸ் கூறும்போது, இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று தெரிவித்தது.

மேலும் ஈரானின் புரட்சிகர காவலர் படை வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் வீடு தெக்ரானில் தாக்கப்பட்டது. இதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவித்தது.

இந்த கொலை சம்பவம் எவ்வாறு நடந்தது, இஸ்மாயிலை கொலை செய்தது யார்? என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

ஹமாசின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவர் சந்தித்து பேசினார். அதன்பின் அவர் தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில்தான் அவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் சார்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இஸ்மாயில் ஹனியேயை இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில், வெளிநாட்டு ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு தாங்கள் பதிலளிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News