உலகம்

இஸ்ரேலில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்- மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது

Published On 2023-07-11 05:20 GMT   |   Update On 2023-07-11 05:20 GMT
  • போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
  • இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.

ஜெருசலேம்:

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News