உலகம்

குற்றங்களை குறைக்க ஜப்பானில் பாலியல் உறவு வயது 16 ஆக உயர்வு

Published On 2023-06-17 10:46 IST   |   Update On 2023-06-17 10:46:00 IST
  • சட்டதிருத்த மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • பாலியல் நோக்கங்களுக்காக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.2.86 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

டோக்கியோ:

ஜப்பானில், பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது. அதில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டதிருத்த மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் நோக்கங்களுக்காக மிரட்டுதல், உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.2.86 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த சீர் திருத்தத்துக்கு மனித உரிமை மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மனித உரிமை குழு ஒன்று கூறும்போது, பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை உயர்த்துவது குழந்தைகளுக்கு எதிரான பெரியவர்கள் செய்யும் பாலியல் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற செய்தியை சமூகத்திற்கு அனுப்பும். இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று தெரிவித்தது.

ஜப்பானில் 1907-ம் ஆண்டில் இருந்து 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றவர்களாக கருதப்பட்டனர். இதனால் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது வயது வரம்பை 16 ஆக ஜப்பான் அரசு உயர்த்தி உள்ளது.

பாலியல் உறவுக்காக சட்டப்பூர்வ ஒப்புதல் வயது இங்கிலாந்தில் 16 ஆகவும், பிரான்சில் 15 ஆகவும், ஜெர்மனி, சீனாவில் 14 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News