உலகம்
null

மீண்டு வரும் லெபனான்.. பாதிக்கபட்டவர்களுக்கு ரூ.52 கோடி நிவாரணம் வழங்கும் ஹிஸ்புல்லா

Published On 2024-12-06 15:28 IST   |   Update On 2024-12-06 15:28:00 IST
  • ஒரு நபருக்கு $300 [ 25 ஆயிரம் ரூபாய்] முதல் $400 [33 ஆயிரம் ரூபாய்] வழங்கப்படும்
  • லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியவில் தஞ்சம் அடைந்தனர்

லெபனானில் இஸ்ரேலுடனான 14 மாத கால போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டாலருக்கு [சுமார் 42 கோடி ரூபாய்] மேல் ரொக்கமாக ஹிஸ்புல்லா விநியோகித்துள்ளதாக அவ்வமைப்பின் தற்போதைய தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.

ஒரு நபருக்கு $300 [25 ஆயிரம் ரூபாய்] முதல் $400 [33 ஆயிரம் ரூபாய்] வரையிலான வீதத்திலும் 233,500 பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு $77 மில்லியனுக்கும் [சுமார் 51 கோடியே 98 லட்சம் ரூபாய்] அதிகமான தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். தலைநகர் பெய்ரூட்டில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வாடகையாக $6,000 மற்றும் தலைநகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு $4,000, வீடுகளை இழந்தவர்களுக்கு $8,000 வீதம் ஹிஸ்புல்லா ஒதுக்கியுள்ளது.

 

நைம் காசிம்

இஸ்ரேல் தாக்குதலால் அதிக சேதத்தைச் சந்தித்த தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் தெற்கு மற்றும் ஷியா மக்கள் அதிகம் உள்ள கிழக்கு லெபனான் பகுதிகளுக்கு பெரும்பான்மையான நிவாரண தொகை சென்று சேர்கிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பண ஆதாரமாக இருக்கும் ஈரான் உதவியுடன் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. காசாவுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது  இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3500க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். அவருக்கு பின் நைம் காசிம் தலைவரானார்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியவில் தஞ்சம் அடைந்தனர். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இணைந்து ஏற்படுத்திய போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும் முந்தைய தாக்குதல்கள் லெபனான் முழுவதும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. போர் நிறுத்தனத்தின் பின் அனைவரும் மீண்டும் தத்தமது இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

 

ஐநா மற்றும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி , 14 மாத கால சண்டையில் லெபனானில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 3.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழு என்பதையும் தாண்டி ஹிஸ்புல்லா லெபனானில் குறிப்பிடத்தகுந்த அரசியல் சக்தியாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News