காற்று மாசுபாட்டால் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு
- விவசாயிகளின் பண்ணை பொருட்கள் எரிப்பால் புகை மூட்டம் குறையாமல் இருக்கிறது
- PM 2.5 தாக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என NESDC வலியுறுத்தியது
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன். இவர்களில் 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான மக்கள், காற்று மாசு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் (National Economic and Social Development Council) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
பண்ணை பொருட்களில் தேவையற்றவைகளை எரிக்கும் அந்நாட்டு விவசாயிகளின் பரவலான பழக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகியவற்றால் புகைமூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
2024 ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் மாசுபாடு தொடர்பான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் இதய கோளாறு போன்ற மாசுபாடு தொடர்பான நோய்களால் நாள்பட்ட கணக்கில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ல் முதல் 9 வாரங்களில் 1.3 மில்லியன் என இருந்தது.
தற்போது (2024 தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 1.6 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
சுவாச மண்டலத்தை பாதிக்க கூடிய 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைந்த அளவிலான சிறிய, அபாயகரமான துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடுகின்றன. தொடர்ந்து, இத்துகள்கள் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுத்தி இருமல் மற்றும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்த கூடியவை. இது மட்டுமின்றி இவை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.
இத்தகைய துகள்களை "PM 2.5" என சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.
பொது சுகாதாரத்தில் "PM 2.5" ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்க தாய்லாந்து அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என NESDC கூறியது.
தாய்லாந்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கரும்பு தோட்டம் மற்றும் நெல் விளைநிலங்கள் ஆகியவற்றில் வைக்கோல் போன்றவற்றை விவசாயிகள் எரிப்பது தொடர்கதையாகி வருவதால் காற்று மாசுபாடு அந்நாட்டில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.