உலகம்

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம்

Published On 2023-08-12 21:30 GMT   |   Update On 2023-08-12 21:30 GMT
  • பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்காலிக பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பாராளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரைஸ் அகமது இணைந்து தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககரை நியமித்துள்ளனர். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை அன்வர் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags:    

Similar News