பெரு நாட்டில் அவசர நிலை அமல்: அதிபர் நீக்கத்தை எதிர்த்து கலவரம் மூண்டதால் அதிரடி
- பெட்ரோ காஸ்டிலோ அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- இந்த அவசர நிலை 30 நாட்கள் அமலில் இருக்கும்.
லிமா :
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் பதவிக்கு வந்தார்.
ஆனால் அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை அவர் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி அவர் திடீரென டெலிவிஷனில் தோன்றிப்பேசியபோது, நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு எம்.பி.க்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
உடனே அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக் கூடியது. அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அந்த சூட்டோடு சூடாக புதிய அதிபராக, துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.
அதே நேரத்தில் பெட்ரோ காஸ்டிலோ அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிபதி ஜூவான் செக்லே உத்தரவிட்டார்.
ஆனால் அவரை விசாரணைக்கு முன்பாக 18 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் முறையிட்டனர். இது தொடர்பான விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம், கைது, சிறையில் அடைப்பு என அடுத்தடுத்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அவரை விடுதலை செய்யக்கோரியும். நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தக்கோரியும் நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர். இந்தப் போராட்டங்களில் வன்முறை தாண்டவமாடியது. சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.
நாட்டின் தென்பகுதிகளில் பெரும் கலவரங்கள் மூண்டன. பொதுச்சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்தப் போராட்டங்களை ஒடுக்க நேற்று முன்தினம் அந்த நாட்டின் மந்திரிசபை கூடி விவாதித்தது. இதில் நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதையொட்டிய அறிவிப்பை அந்த நாட்டின் ராணுவ மந்திரி ஆல்பர்டோ ஒட்டராலோ நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுச்சொத்துகள் சூறையாடுவதாலும், வன்முறை வெடித்துள்ளதாலும், நெடுஞ்சாலைகளையும், சாலைகளையும் கைப்பற்றி தடுப்புகள் ஏற்படுத்துவதாலும் நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இந்த அவசர நிலை 30 நாட்கள் அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரு நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் கட்டுப்பாடு தேசிய போலீஸ் படை மற்றும் ஆயுதப்படைகள் வசம் சென்றுள்ளது.
இதனால் நாடாளுமன்ற உரிமைகள் இடைநீக்கம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தாராளமாக நடமாட முடியாது. மற்ற அரசியல் சாசன வாக்குறுதிகளும் தற்காலிகமாக ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.