பாகிஸ்தானில் மே 9 வன்முறை: இம்ரான்கான் மருமகனுக்கு 10 ஆண்டு சிறை
- வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு கடந்த வாரம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது.
- மேலும் 60 குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி இம்ரான்கான் ஆதரவாளர்கள், அவரை கைது செய்ததற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ராணுவ வாகனங்கள், ராணுவ கமாண்டர் ஒருவரின் வீடு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.இது தொடர்பான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு கடந்த வாரம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேலும் 60 குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அவர்கள் 2 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றனர். இதில் இம்ரான்கானின் மருமகன் ஹாசன் கான் நியாசி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ராணுவ கமாண்டரின் வீட்டை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.