இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
- விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.
- சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும், பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது.
ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று [வியாழக்கிழமை] இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் ஐநா இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன. நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது.
நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். நாங்கள் புறப்படுவதற்கு முன் விமான நிலையத்தின் சேதம் சரிசெய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.
தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் என்று டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹூதிகள் பயன்படுத்திய உள்கட்டமைப்பு மற்றும் ஹொடைடா, அல்-சலிஃப் மற்றும் ராஸ் காண்டிப் துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. டெட்ரோஸின் அறிக்கை பற்றிய கேள்விகளுக்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டார். ஐநா பொதுச்செயலாளர் தங்கள் நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.