மன்மோகன்சிங் மறைவு: புதின், மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்
- இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்றார் அதிபர் மேக்ரான்.
- அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவு கூருவோம் என தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்:
இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என தெரிவித்தார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்:
இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சனைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன என்றார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.