ஜெர்மன் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி.. தேர்தல் தேதி அறிவிப்பு
- ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
- சவூதி அரேபிய மருத்துவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார்.
ஜெர்மன் பாராளுமன்றத்தை அந்நாட்டின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்றைய தினம் கலைத்து உத்தரவிட்டார்.
சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி தேர்தல் தேதியை ஜனாதிபதி நேற்று அரசை கலைத்து அடுத்த தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளார்.
ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த பிப்ரவரி 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி அறிவித்தார்.
மேலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தேர்தல் பிரச்சாரம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனி உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக கிழக்கு நகரமான மாக்டேபர்க்கில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, 50 வயதான சவூதி அரேபிய மருத்துவர் தலேப் அல்-அப்துல்மோசென் என்பவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார். இதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டு அரசியலிலும் எதிரொலித்து வருகிறது.