உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்கள் பலி - தெரிந்தே சாவில் தள்ளும் ரஷியா - வெள்ளை மாளிகை
- கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர்
- உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா 12,000 வீரர்கள் வரை அனுப்பி வைத்ததாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் கூறின. இந்நிலையில் போரில் அதிக எண்ணிக்கையிலான வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர். அங்கு தாங்கள் நடத்தும் தாக்குதல்களில் சுமார் 3000 வட கொரிய வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்ட காயமடைந்த வடகொரிய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவும் இந்த உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மேலும் புதிய வீரர்கள், இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரிய முப்படைகளின் கூட்டு தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷிய மற்றும் வட கொரிய இராணுவத் தலைவர்கள் இந்த வீரர்களை மனித கேடயமாகக் கருதி செலவழிக்கின்றனர்.
தெரிந்தே பல சந்தர்ப்பங்களிலும் உக்ரேனிய படைகளுக்கு எதிரான நம்பிக்கையற்ற தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இவை ஒரு முன்பே கணிக்கப்பட்ட கூட்டு உயிரிழப்புகள் என்று அவர் விவரித்தார்.
மேலும் வரும் நாட்களில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை அனுப்ப ஜோ பைடன் ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்தார். முன்னதாக உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 3 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது.