null
வங்காளதேசத்தில் ஓட்டு போடும் வயது வரம்பு குறைக்க முடிவு
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.
- அரசியல் கட்சிகள் தேர்தலின் போது 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.
டாக்கா:
வங்காள தேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் ஓட்டு போடும் வயதை குறைக்க இடைக்கால அரசு முடிவு செய்து
உள்ளது. தற்போது அங்கு வாக்காளர்களின் குறைந்த பட்ச வயது 18- ஆக உள்ளது. இந்த வயதை 18-ல் இருந்து 17 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.
அடுத்த நடைபெறும் பொதுத்தேர்தலின் போது இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.
தற்போது அங்கு எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வயது 25- ஆக இருக்கிறது. இந்த வயதை 21- ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இது தொடர்பாக அந்த நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் அலி ரியாஸ் கூறும்போது 21 வயது இளைஞர் எம்.பி. ஆவதை சாத்தியமாக்கும் ஒரு தீவிரமான மாற்றத்தை குழு சிந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலின் போது 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.