உலகம்

ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி

Published On 2025-03-09 02:56 IST   |   Update On 2025-03-09 02:56:00 IST
  • உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தியது.
  • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

கீவ்:

உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, உக்ரைனுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்து ஆயுதம், நிதியுதவி வழங்கியது. ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. உக்ரைனுக்கு அளித்துவந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. டோனெட்ஸ்க் பகுதியில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கார்கிவ் மற்றும் ஒடிசா பகுதிகளில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்பட்டன.

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகம் ஒன்றின் மீது தாக்குதலை தொடுக்க பயன்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக, ஜெலன்ஸ்கி டெலிகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், மீட்புக்குழுவினரை இலக்காக கொண்டு ரஷியா மற்றொரு தாக்குதலை உள்நோக்கத்துடன் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல், ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை என எடுத்துக் காட்டுகின்றன என தெரிவித்தார்.

Tags:    

Similar News