நாடுகடத்த தடை கோரிய ராணா மனுவை தள்ளுபடி செய்தது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
- இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக ராணா அறிவிக்கப்பட்டார்.
- மற்றொரு பயங்கரவாத வழக்கில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி தஹாவூர் ராணா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா மற்றொரு பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதையேற்று ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது. இதனால் ராணா விரைவில் நாடு கடத்தப்படுவார் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே, தான் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா நேற்று முன்தினம் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், என்னை நாடு கடத்துவது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்தரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் என்னை கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது. எனக்கு தீவிரமான உடல்நல பிரச்சனைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரா–னது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ராணாவின் இந்த அவசர மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. எனவே விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.