வட கொரியா அறிமுகம் செய்த அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்.. அடுத்த கட்டத்தில் கிம்!
- 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்
- இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.
வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கப்பல்கட்டும் தளங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்த படங்களை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
அப்போது பேசிய அவர், கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த செய்தி தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ மாநாட்டின் போது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். இப்போது இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.
பிற நாடுகளிடம் இருந்து துண்டிக்கப்பட்ட போதும் இத்தனை நவீன தொழில்நுட்பங்களை வட கொரியா எங்கிருந்து பெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பலர் ரஷியாவின் திசையை நோக்கி கை காட்டுகின்றனர்.