உலகம்

பாகிஸ்தானில் இந்திய கடற்படை அதிகாரியை கடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை

Published On 2025-03-09 10:33 IST   |   Update On 2025-03-09 10:33:00 IST
  • குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
  • ஆயுதம் மற்றும் மனித கடத்தல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.

இஸ்லாமாபாத்:

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு குல்பூஷண் ஜாதவை ஒரு கும்பல் கடத்தி சென்று ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தது. குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

இதையடுத்து அவருக்கு 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

தண்டனையை மறுபரிசீலனை செய்ய சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டதால் 2019-ம் ஆண்டு குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் குல்பூஷண் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதி முப்தி ஷா மிர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பலுசிஸ்தானின் துர்பட் பகுதியில் முப்தி ஷா மிர்ரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.

ஜாமியத் உலமா அமைப்பு உறுப்பினரான முப்தி ஷா மிர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நெருக்கமாக இருந்துள்ளார். ஆயுதம் மற்றும் மனித கடத்தல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.

குல்பூஷண் யாதவை ஜெய்ஷ் அல்-அதில் அமைப்பின் முல்லா உமர் இரானி தலைமையிலான குழு கடத்திச் சென்றது. பின்னர் அவர் முப்தி ஷா மிர் உள்பட பல இடைத்தரகர்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதில் முப்தி ஷா மிர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே 2020-ம் ஆண்டு இரானியும் அவரது 2 மகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பி டத்தக்கது.

முப்தி ஷா மிர் கடந்த ஆண்டு 2 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பி இருந்தார். அவர் பலுசிஸ்தானில் தீவிரவாதத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.

Tags:    

Similar News