உலகம்

அர்ஜென்டினா வெள்ளப்பெருக்கில் 13 பேர் பலி.. ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்த விநோதம்

Published On 2025-03-09 16:26 IST   |   Update On 2025-03-09 16:26:00 IST
  • எட்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் மழை பெய்தது.
  • பார்வையிட வந்த பாதுகாப்பு அமைச்சரை வெள்ளநீரில் இழுக்க முயன்றனர்.

அர்ஜென்டினாவில் ஒரு வருடத்திற்குத் தேவையான மழை சில மணி நேரங்களிலேயே பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட கடுமையான புயல் வெள்ளத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை, எட்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் பெய்தது. இது பஹியா பிளாங்காவில் ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை விட அதிகம் என்று மாகாண பாதுகாப்பு அமைச்சர் ஜேவியர் அலோன்சோ தெரிவித்தார்.

புயலைத் தொடர்ந்து பெய்ய பலத்த மழை காரணமாக மருத்துவமனை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுற்றுப்புறங்கள் தீவுகளாக மாறின. நகரின் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை 10 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை நேற்று (சனிக்கிழமை) 13 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

350,000 மக்கள்தொகை கொண்ட இந்த நகரம், தலைநகரான பியூனஸ் அயர்ஸிலிருந்து தென்மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ள பாதிப்பை நேற்று பார்வையிட வந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது அப்பகுதி மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

சிலர் அவரை வெள்ள நீரில் இழுக்க முயன்றனர். ஆனால் அவர் பத்திரமாக அங்கிருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

Tags:    

Similar News