உலகம்

ரஷியாவுடன் போர் நிறுத்தம் - அமெரிக்காவுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தும் ஜெலன்ஸ்கி..

Published On 2025-03-10 11:24 IST   |   Update On 2025-03-10 11:24:00 IST
  • பேச்சுவார்த்தை முடிவதற்குள் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
  • உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

ரஷியாவுடனான போர் நிறுத்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா வருகிறார். சவுதி அரேபியாவில் வைத்து உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே ரஷியாவுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், பேச்சுவார்த்தை முடிவதற்குள் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.

இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே பரபர சூழல் உருவானது. இதன் காரணமாக ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி மன்னர் முகமது பின் சல்மானை இன்று (திங்கள் கிழமை) சந்திக்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து, நாளை (செவ்வாய் கிழமை) அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இன்று சவுதி அரேபியா வருகிறார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது, அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகளை இறுதி செய்வது மற்றும் முதற்கட்டமாக போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க மத்திய கிழக்கு செயலாளர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் தரப்பு விருப்பங்கள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமைதியை கொண்டுவரும் விவகாரத்திலும், ஆதரவை தொடர்வதிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News