கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதி ஆகாது.. டிரம்ப்புக்கு புதிய பிரதமர் மார்க் கார்னி சாட்டையடி!
- கனேடியர்களை யாராவது தொந்தரவு செய்தால், அந்த நபரை அவக்ரள் சும்மா விடமாட்டார்கள்.
- அவர்கள் நம் வாழ்க்கை முறையையே அழித்துவிடுவார்கள்
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக மார்க் கார்னி பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.
கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக மாற்ற கங்கணம் கட்டி அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் மீது வரிச் சுமைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த மாற்றம் நிகழ்கிறது.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மார்க் கார்னி பேசியதாவது, நாங்கள் தயாரிக்கும் பொருட்கள், நாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் எங்கள் வாழ்வாதாரத்தின் மீது டொனால்டு டிரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார். அவர் கனேடிய குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். ஆனால் நாங்கள் அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது.
நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கவில்லை, ஆனால் கனேடியர்களை யாராவது தொந்தரவு செய்தால், அந்த நபரை அவக்ரள் சும்மா விடமாட்டார்கள்.
அமெரிக்கர்கள் நமது வளங்கள், நமது நீர், நமது நிலம், நமது நாட்டை விரும்புகிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நம் வாழ்க்கை முறையையே அழித்துவிடுவார்கள். அமெரிக்கா கனடா அல்ல, அதேபோல கனடா ஒருபோதும் எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.