
சாம்சங் நிறுவனத்தின் co-CEO மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு
- சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இணை தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவியை ஏற்க இருப்பது யார் என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஹான் சாம்சங் நிறுவனந்தின் நுகர்வோர் மின்சாதனங்கள் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவுக்கு தலைமை வகித்து வந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் டிஸ்ப்ளே பிரிவில் பணியில் சேர்ந்த ஹான் ஜாங் ஹீ கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இணை தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்று கூறப்படுகிறது.
தொலைகாட்சி பிரிவில் சாம்சங் நிறுவனம் முன்னணி இடத்தை அடைய ஹான் பெரும் பங்கு வகித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வீட்டு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் பங்குதாரர்களிடையே உரையாற்றிய ஹான்,"2025 ஆண்டு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும், எனினும் நிறுவனங்களுடன் இணைதல் மற்றும் அவற்றை கைப்பற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொண்டு வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்," என்று தெரிவித்து இருந்தார்.