உலகம்
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி: டிரம்ப் உத்தரவும், விளைவுகளும்.. முழு விவரம்

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி: டிரம்ப் உத்தரவும், விளைவுகளும்.. முழு விவரம்

Published On 2025-03-27 08:40 IST   |   Update On 2025-03-27 13:28:00 IST
  • அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
  • வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.

அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய டிரம்ப், "இது வளர்ச்சியை தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரிவிதிக்கிறோம்," என்று தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கும் புதிய வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.

அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே வாகனங்கள் இறக்குமதி விவகாரத்தில் வரி விதிப்பது பற்றி பேசி வந்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும், இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது 25 சதவீதம் வரி விதித்து இருப்பதன் மூலம் அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு சுமார் 8 மில்லியன் கார்கள் மற்றும் இலகு ரக டிரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு மட்டும் 244 பில்லியன் டாலர்கள் ஆகும். மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு அதிக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வாகனங்களை தொடர்ந்து அவற்றுக்கான உதிரிபாகங்கள் பெரும்பாலும் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 197 பில்லியன் டாலர்கள் ஆகும்.

வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

வாகனங்கள் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

வரி விதிப்பு அமலுக்கு வரும் போது அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை 12500 டாலர்கள் வரை அதிகரிக்கும். இதன் மூலம் மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கக்கூடிய சூழல் குறையும்.

வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என டிரம்ப் நம்பிக்கை.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் நீண்ட கால பயன்கள் அதிகரிக்கும் என்ற நிலையில், குறுகிய காலக்கட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவீனங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்கள் பெரும்பாலான பாகங்களை பெறுவதற்கு மெக்சிகோ, கனடா மற்றும் ஆசிய சந்தைகளை சார்ந்து இருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். இதனால், வாகனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.

அதிபர் டிரம்ப் உத்தரவு காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெலான்டிஸ் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் பங்குகள் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் லாபத்தில் நீண்ட கால விளைவுகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

கனடா, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரிவிதிப்பு நடவடிக்கை வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கிவிடும். ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அமெரிக்க மதுபானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த அறிவிப்புக்கு அதிபர் டிரம்ப் ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று பதிலடி கொடுத்தார்.

அதிக கார் செலவுகளை ஈடுகட்ட டிரம்ப் ஒரு புதிய வரி ஊக்கத்தொகையை முன்மொழிந்துள்ளார். அதன்படி கார் வாங்குபவர்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தேர்வு செய்யும் போது அரசு வருமான வரிகளில் இருந்து வாகன கடன்களுக்கான வட்டியைக் கழிக்க அனுமதிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்த வரிகள் பணவீக்கத்தைத் தூண்டி, நுகர்வோருக்கு தேர்வுகளை குறைக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இவை டிரம்பின் பரந்த பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாகும். இதில் எஃகு, அலுமினியம், கணினி சில்லுகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் மீதான வரிகளும் அடங்கும்.

Tags:    

Similar News