மெக்சிகோவில் மதுபான பாரில் துப்பாக்கி சூடு- 10 பேர் பலி
- மர்ம கும்பல் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
- குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மெக்சிகோ:
மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது.
இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் பாருக்குள் புகுந்தனர். அவர்கள் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் மதுபான பாரைவிட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து 10 பேர் இறந்தனர். இதில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் 10 பேரையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.