பெரு நாட்டில் ஷாப்பிங் மால் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் பலி.. 78 பேர் காயம் - பதறடிக்கும் வீடியோ
- தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ட்ருஜிலோ.
- நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ட்ருஜிலோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் மாலில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்தது. உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீட்டர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் எஈடுபட்டுள்ளனர்.