என் மலர்
பெரு
- மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
- காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.
லிமா:
தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.
அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.
இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ட்ருஜிலோ.
- நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ட்ருஜிலோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் மாலில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்தது. உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீட்டர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் எஈடுபட்டுள்ளனர்.
- பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
- 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரு நாட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரு நாட்டில் பேருந்து விபத்துக்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டில் 2023 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 3,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
- கடந்த பிப்ரவரியில் இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.
பெரு நாட்டின் சில்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுவான்கேயோ பகுதியில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா ஆகிய இரு உள்ளூர் அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்தது. 22 நிமிடங்கள் போட்டி நடந்ததில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா (வயது 39) என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு உடனடியாக கீழே விழுந்துள்ளார். அவர் தவிர, கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லேக்டா (வயது 40) என்பவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. குறைந்தது 8 பேர் மின்னல் தாக்கியதும் மைதானத்தில் சரிந்து விழுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
குரூஸ் மிஜா மீது தீப்பற்றுவது போன்ற காட்சியும் அதில் காணப்பட்டது. இதில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, முன்பே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால், போட்டியும் கைவிடப்பட்டது.
கையில் உலோக பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்துள்ளார் என்றும் அதனால், மின்னல் அவரை தாக்கியிருக்க கூடும் என தகவல் கூறுகிறது. கடந்த பிப்ரவரியில், இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா (வயது 30) என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார். இதேபோன்று, காங்கோவில் 25 ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
- 12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.
பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்ந்ததால் அபாத்தின் உடல்நலம் தேறியதாக அந்த நாட்டின் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது கின்னஸ் உலக சாதனையில் அபாத்தின் பெயரை உலகின் வயதான நபராக பதிவு செய்ய உதவியதாக பெரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.
- பெரு நாட்டில் மிகவும் பிரபலமான திரை நட்சத்திரம் தைனா ஃபீல்ட்ஸ்
- 24-வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டைச் சேர்ந்த நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் கூறியிருந்தார்.
பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், "என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது. இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது''என வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.
இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எல் நினோ தாக்கத்தால் கணிக்க முடியாத பருவகால நிகழ்வுகள் ஏற்படுகின்றன
- எல் நினோவை எதிர்கொள்ள பெரு நாட்டதிபர் சர்வதேச கூட்டு முயற்சியை கோரியுள்ளார்
அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது. இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைபொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி திகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன.
இந்நிகழ்வை "எல் நினோ" (El Nino) என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். பல வருடங்களாகவே இந்த சிக்கலை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வானிலை நிபுணர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரு நாட்டில், செப்டம்பர் 13 அன்று அந்நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம், நீர் நிலை குறித்த தனது தொழில்நுட்ப அறிக்கையில் எல் நினோ தாக்குதல் 2024 கோடை காலம் வரை இருக்கும் என எச்சரித்தது.
இதனையடுத்து பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் அதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே (Dina Boluarte) எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தினார்.
- விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
- தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அயகுச்சோவா:
பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பலர் காயம் அடைந்தனர், பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- பெரு நாட்டின் மக்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.
- பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்.
பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
- தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
- விபத்து நடந்த தங்கசுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது.
லாஎஸ்பெரான்சா:
தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அந்த தங்கசுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்து தொழிலாளர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. அதற்குள் தீ அவர்களை சூழ்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் பற்றி அறிந்ததும் பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர். இறந்தவர்கள் உடலைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த தங்கசுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த பகுதியில் உள்ள பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.