உலகம்

உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி அவசியமில்லை.. ஐரோப்பிய தலைவர்கள் மீதும் டிரம்ப் அட்டாக்

Published On 2025-02-22 17:56 IST   |   Update On 2025-02-22 17:56:00 IST
  • பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை.
  • இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

அவர் ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசினார். மேலும் சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்துவந்த நிலையில் அந்த நிலைப்பாட்டிலிருந்து டிரம்ப் விலகி வருகிறார்.

இதனால் டிரம்பை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஜெலன்ஸ்கியை சர்வாதி காரி என டிரம்ப் கூறினார்.இந்த நிலையில் ஜெலன்ஸ்கியை டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது,

ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன். அவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் கடுமை காட்டி வருகிறார்.

இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப்போவதில்லை.

உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் விரும்புகிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று தெரிவித்தார்.

உக்ரைனுக்கான ஆதரவு நிலையில் டிரம்ப் விலகி செல்வதையடுத்து ஐரோப்பா தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருந்தனர்.

இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் எதுவும் செய்யவில்லை என்றார். இதற்கிடையே இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News