இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நியூசிலாந்து
- அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
- ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங்.
இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு (32) நியூசிலாந்து நாட்டில் தற்போது 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் 2023 இல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் 21 வயது இளைஞர் ஒருவர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பால்தேஜ் சிங் 700 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கிற்கு அவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மெத்தபெட்டமைன் என்றால் என்ன?
இது "மெத்" அல்லது "படிக மெத்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) பாதித்து மூளையில் டோபமைனின் அளவை அதிகரித்து, ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
இது பழக்கமாக மாறி ஆபத்து விளைவிக்கக்கூடியது. இதன் பயன்பாடு, மனநல கோளாறுகள், இதயப் பிரச்சினைகள், தூக்கக் கலக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழிவகுக்கும்.