ராணுவ ஆட்சியை அறிவித்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: அதிபர் யூன்
- அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது
- நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
சியோல்:
தென் கொரியாவில் கடந்த 3-ந்தேதி அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.
பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், அவசரநிலை முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பிறப்பித்த ராணுவ சட்டத்தை பாராளுமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ அவசரநிலையை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
இதற்கிடையே தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இத்தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
300 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரது கட்சியின் தலைவரே உள்ள நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது:-
அவசரகால ராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு ராணுவச் சட்டப் பிரகடனம் இருக்குமா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
அதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பிரகடனத்தால் ஏற்படும் எந்தவொரு சட்ட மற்றும் அரசியல் பொறுப்புச்சிக்கல்களையும் நான் தவிர்க்க மாட்டேன்.
எனது பதவிக்காலம் உள்பட நாட்டை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்ற முடிவை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் தலை வணங்குகிறேன். மக்களுக்கு நான் ஏற்படுத்திய ஏதேனும் கவலைகளுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.