கொரோனாவுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலி- சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
- அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது.
பீஜிங்:
சீனாவின் வுகான் நகரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கடைசியில் முதன் முதலில் கொரோனா நோய் கண்டறியப்பட்டது.
அதன் பிறகு இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த தொற்று வேகமாக பரவியது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
சுமார் 2 ஆண்டு காலத்துக்கும் மேலாக உலகத்தை ஆட்டிப்படைத்த கொரோனா நோய் படிப்படியாக குறைந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் இன்னும் தொற்று முடிவுக்கு வரவில்லை.
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா பலி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முதன் முறையாக தலைநகர் பீஜிங்கில் கொரோனாவுக்கு 87 வயது முதியவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 வயது பெண் ஒருவரும் உயிர் இழந்து விட்டார்.
நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 24,215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி விட்டதாலும் அடுத்தடுத்து 2 பேர் பலியாகி விட்டதாலும் பீஜிங்கில் மறுபடியும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், மற்றும் அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது. தேவை இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பால் விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க சீனா அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.