உலகம்

வேன் மோதி ஆற்றுக்குள் விழுந்த சுற்றுலா பஸ்- 20 பேர் பலி

Published On 2023-02-16 00:45 GMT   |   Update On 2023-02-16 00:57 GMT
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது.
  • விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

கேப் டவுன்:

தென்ஆப்பிரிகாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

கனமழை, வெள்ளத்தால் 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை, வெள்ளத்தில் அந்த மாகாணங்களில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லிம்போபோ மாகாணத்தின் வெம்பே நகரில் ஆற்றின் மேல் கட்டுப்பட்டுள்ள மேம்பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் கவச வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது. பின்னர் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பஸ்சுடன் வேன் நேருக்கு நேர் மோதியது.

இதில் நிலைதடுமாறிய பஸ் பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

அவர்கள் ராட்சத கிரேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றுக்குள் விழுந்த பஸ்சை வெளியே எடுத்தனர். தொடர்ந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் மற்றும் ஆற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் பஸ் ஆற்றில் விழுந்ததில் 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி அவர்களை தேடி வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் கனமழை காரணமாக மேம்பாலம் முழுவதும் ஈரப்பதத்துடன் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் கூறப்படுகிறது.

இதனிடையே தென்ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதை தொடர்ந்து அங்கு நாடு தழுவிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News