Recap 2024

2024 டைம் லைன்: பாலஸ்தீனம் - ஒரு தேசத்தின் படுகொலை.. 1 வருடத்தைக் கடந்த போர் - மீள்பார்வை

Published On 2024-12-25 13:10 GMT   |   Update On 2024-12-25 13:17 GMT
  • உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
  • சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது. இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்து ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தொற்று அபாயம் போன்றவற்றுக்கு மத்தியில் சொந்த நாட்டில் அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக கிழம்பிய இஸ்ரேல் ராணுவம், முகாம்கள், மருத்துவமனைகள் என வகை தொகை இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் வேட்டை என்ற போர்வையில் பாலஸ்தீனத்தில் இன அழித்தொழிப்பு நடந்து வருவதாகச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது.

போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். ஐ.நா.வின் பாலஸ்தீன நிவாரண அமைப்புக்கும் இஸ்ரேலில் தடை விதிக்கப்பட்டது. 

 

ஐநா நவம்பர் அறிக்கை

கடந்த நவம்பர் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கைபடி, உயிரிழந்த 43,500 [அப்போதைய தரவு] பாலஸ்தீனர்களில் 70 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டது. அதாவது கொல்லப்பட்டவர்களில் சுமார் 30450 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

 

5 முதல் 9 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 10-14 வயது குழந்தைகளும், அதற்கடுத்து 0 முதல் 4 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். பலியான 43 ஆயிரம் பேரில் பிறந்த 1 நாள் ஆன குழந்தை மிகவும் குறைந்த வயது பலியாகவும், 97 வயது மூதாட்டி மிகவும் அதிக வயது பலியாகவும் உள்ளனர். 

ஜெனெரல்ஸ் பட்டினி திட்டம்

நிலைமையைத் தீவிரப்படுத்தும் வகையில் இஸ்ரேல் ஈவு இரக்கமற்ற புதிய திட்டம் ஒன்றையும் கடந்த அக்டோபரில் வகுத்துள்ளது. ஜெனெரல்ஸ் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திடம் வடக்கு காசாவுக்குள் எந்த ஒரு உணவும் அத்தியாவசிய பொருட்களும் செல்லவிடாமல் அங்குள்ளவர்களைப் பட்டினி போடுவதே ஆகும். இந்த திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதம்

இந்த மாத தொடக்கத்தில்சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயத்தங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

 

இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்தார். உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையை சர்வதேச அரங்கில் மறைக்க இந்த முறையை இஸ்ரேல் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

நேதன்யாகு வீடு தாக்குதல்

கடந்த மாதம் வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.

முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து ஹிஸ்புல்லவால் முதல் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பழிவாங்க வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்தனர்.

 

 

போலியோ சொட்டு மருந்து முகாம் தாக்குதல்

கடந்த மாதம் காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர்.

முகாமுக்காக தற்காலிக போர் நிறுத்தம் இருந்தபோதிலும் 3-வது கட்ட சொட்டு மருந்து முகாம்களின்போது வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆராம்ப சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் வந்திருந்தபோது அந்த சுகாதர மையம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

ரஃபா தாக்குதல்

பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

 

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டானது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

 

 

மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்டது.   

காசா போர் 2024 டைம் லைன் 

ஜனவரி 26

சர்வதேச நீதிமன்றம், தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளித்து , காசாவில் இனப்படுகொலை நடவடிக்கைகளைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.

பிப்ரவரி 29

"மாவு படுகொலை" என்று அழைக்கப்படும் நாள் . காசா நகரில் ரொட்டி தயாரிக்கும் மாவு உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களை விநியோகித்தபோது கூட்டத்தின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 118 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.

ரம்ஜான் மாதம்

மார்ச் 25

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோன்ற தீர்மானங்களைத் தடுக்க பல சந்தர்ப்பங்களில் வீட்டோ உரிமையைப் பயன்படுத்திய அமெரிக்கா,இந்தியா உள்ளிட்டவை வாக்களிக்கவில்லை. எனவே தீர்மானம் தோற்றது

மே 7

இஸ்ரேல் ரஃபா அகதி முகாம்களை தாக்கி குழந்தைகள் உட்பட 45 பேரை கொன்றது.

ஜூன் 22

24 மணி நேரத்தில் 101 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றது.

ஜூலை 1

இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் குடிநீரைப் பறிப்பதற்காக மேற்குக்கரை நகரமான ஜெரிகோவின் வடக்கே அல்-அவுஜா நீரூற்றில் கழிவுகளை கொட்டியுள்ளனர்

ஜூலை 27

லெபனானில் இருந்து சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகள் மீது ஏவப்பட்ட ராக்கெட் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் காயம் அடைந்தனர்

ஜூலை 31

ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே , ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் தெஹ்ரானில் நடந்த வெடிவிபத்தில் கொல்லப்பட்டார் .

ஆகஸ்ட் 10

காசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளித்து வந்த அல்-தபியீன் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

அக்டோபர் 16

காசாவில் ஹமாஸின் தலைவரும், அக்டோபர் 7 தாக்குதலின் மூளையுமான யாஹ்யா சின்வார் , ரஃபாவில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார்.

நவம்பர் 24

காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்தும் கடந்த மாதம் மற்றும் டிசம்பரில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

டிசம்பர் 22

வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை, பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு

Tags:    

Similar News