Recap 2024

2024 ரீவைண்ட்: தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்- நடப்பாண்டில் மட்டும் 554 தமிழக மீனவர்கள் கைது

Published On 2024-12-25 15:46 GMT   |   Update On 2024-12-25 15:46 GMT
  • தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
  • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளன.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.

இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு மிக மிக கடுமையான அபராதத் தொகை விதிப்பது, 6 மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது, பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுடைமையாக்கிவிடுவது என்கிற அட்டூழியங்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மொட்டை அடித்து அனுப்பியது. இதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

சமீப காலமாக தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் மட்டும் இதுவரை இலங்கை கடற்படையினர் மொத்தம் 554 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், 72 மீன்பிடி படகுககள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மீனவர்களில் பலர் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார். 

பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தினார். பிறகு, " மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசியதாக கூறிய பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகவும், தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.

இரு நாட்டு முக்கிய புள்ளிகளும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த விவகாரத்திற்கு அரசு நிரந்தர தீர்வு காணும் தேதி எப்போது என்று மீனவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News